உள்ளூர்
யாழில் பொதுச் சந்தைக்குள் நுழைந்து காவலாளி மீது கொடூர தாக்குதல்!
யாழ்ப்பாணம் – சங்கானை பொதுச் சந்தைக்குள் இரவுவேளை அத்துமீறி நுழைந்த குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு மிரட்டி சென்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த திங்கட்கிழமை இரவு சங்கானை பொதுச்சந்தை பாதுகாப்பு நடவடிக்கையில் தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்புக் கடமையாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, அங்கு வந்த போதையில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்படும் சந்தேக நபர்கள், யாரோ ஒருவருடைய பெயரைக் கூறி அவர் நிற்கிறாரா? என்று கேட்டிருக்கின்றனர்.
இரவு வேளை என்பதால் அவர் இல்லை என்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதனையடுத்து வாய்த்தர்கத்தில் ஈடுபட்ட அவர்களில் ஒருவர் பூட்டப்பட்டிருந்த கதவின் மீது ஏறி உள் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதேவேளை, அயலில் இருந்தவர்கள் சிலர் வந்து பாதுகாப்பு உத்தியோகத்தரைக் காப்பாற்றியிருக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளது.
சங்கானைப் பகுதியில் சமூகவிரோதச் செயற்பாடுகள், திருட்டுச் சம்பவங்கள் உட்பட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் சில குழுக்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுவரும் நிலையில் பொதுச் சந்தை ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றமை தொடர்பில் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்களா? என்று மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.