உள்ளூர்

யாழில் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்!

Published

on

எதிர்வரும் 20 ஆம் திகதி அரசியல் கட்சிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களை முடக்கி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை (18) யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

இந்த துண்டு பிரசுரங்களானது தென்மராட்சி மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பினால் வழங்கப்பட்டு வருகிறதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. அந்த துண்டு பிரசுரங்களில்,

ஒன்று சேர முடியாத தமிழ் கட்சிகள் 

இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் வடக்கு கிழக்கை முடக்கி ஹர்த்தால் போடுவதன் மூலம் பாதிக்கப்படுவது யார்? இந்த ஹர்த்தால் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகும் தீர்வு என்ன?

காலங்காலமாக போடப்பட்ட ஹர்த்தால் மூலம் தமிழ் மக்கள் அடைந்த இலாபம் என்ன? தெற்கை முடக்கினால் வரவேற்கத்தக்கது. ஆனால் வடக்கு கிழக்கை முடக்கி மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவது வரவேற்கத்தக்கதன்று.

நாட்டில் தொடரும் வங்குரோத்து நிலையில் வியாபாரிகள் வியாபாரம் இல்லாது அல்லாடி வரும் நிலையில் இவ்வாறான கடையடைப்பின் மூலம் கிடைக்கப்போரும் நன்மை என்ன என வியாபாரிகளும் விசனம் தெரிவித்து வருவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

 ஹர்த்தால் எவ்வகையில் நியாயமானது?

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு இடர்களைக் கடந்து மீண்டு வந்த மக்களுக்கு அடுத்த பேரிடியாக பொருளாதாரா நெருக்கடி ஏற்பட்டது. இதிலிருந்து மீள முடியாமல் மக்கள் திண்டாடி வரும் நிலையில் இவ்வாறான ஹர்த்தால் எவ்வகையில் நியாயமானது?

ஒன்று சேர முடியாத தமிழ் கட்சிகள் தமிழர்களின் அபிலாசைகளை எப்போது நிறைவேற்றுவார்கள்? தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நாடகமாடும் இவர்களின் செயற்பாடு மக்களுக்கு எதையுமே பெற்றுக் கொடுக்கப்போவதில்லை என்பது திண்ணம்.

அரசியல் கட்சிகள் தங்களது இருப்பிற்கும் வாக்கு வங்கியை சரிய வீடாமல் காப்பாற்றுவதற்குமே இவ்வாறான வேலைத்திட்டங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிந்தித்து செயற்படுங்கள் எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.  

அதேவேளை தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கக் கோரி வடக்கு கிழக்கு முழுவதும் துண்டுப் பிரசுர விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version