உள்ளூர்
தலை மற்றும் கால்கள் இல்லாத சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரண்!
முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு சியம்பலாப்பே பிரதேசத்தில் தலை மற்றும் கால்கள் இல்லாத சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகரான அச் சந்தேக நபர் தனது சட்டத்தரணிகளுடன் சபுகஸ்கந்த பொலிஸில் வந்து சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு உதவியதாகக் கூறப்படும் நபரும் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் சியம்பலாப்பே தெற்கில் வசிக்கும் 53 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் இரண்டாவது சந்தேக நபரான 48 வயதுடைய நபரும் அதே பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்ய உதவிய நபர்
கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை வெட்டுவதற்கு சந்தேகநபர் பிரதான சந்தேக நபருக்கு உதவியதாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போது பெண்ணின் சடலத்தை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சந்தேகநபர்களிடம் சப்புகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
51 வயதான பிரதீபா என்ற பெண் கடந்த 27 ஆம் திகதி காலை முதல் காணவில்லை என அவரது மகள் முல்லேரியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கமைய முல்லேரிய பொலிஸ் நிலையத்தினால் பொலிஸ் குழு ஒன்று சிசிரிவி கமெராவை பரிசோதித்த போது அப் பெண் அங்கொடையில் இருந்து கடுவெலைக்கு நீல நிற முச்சக்கரவண்டியில் சென்றமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கடுவெல நகரில் அமைந்துள்ள மளிகைக் கடை ஒன்றின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் சாரதி ஒருவருடன் அவர் வருவது சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
அதன் பின் அப் பெண் உணவை வாங்கிக் கொண்டு சுமார் 10 நிமிடம் உணவு சாப்பிட்டு விட்டு இருவரும் அங்கிருந்து புறப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
காணாமல் போன பெண்
KI 3030 என்ற சாம்பல் நிற காரில் அவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அப் பெண் அன்றிலிருந்தே காணவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அக் கார் தொடர்பில் முல்லேரிய பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையின் போது அது சியம்பலாப்பே பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் சுதீர வசந்த என்பவருடையது என தெரியவந்துள்ளது.
அப் பெண் இவருடன் சுமார் 20 வருடங்களாக நெருங்கிய உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பணம் காரணமாக இருவருக்கும் சிறிது காலமாக தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவரது சியாம்பலாப்பே பகுதியில் கைவிடப்பட்ட வீடு ஒன்றை பொலிஸார் சோதனையிட்ட போது ஒரு அறைக்குள் நீண்ட முடி மற்றும் இரத்தக் கறைகள், வீட்டின் வெளி பகுதியளவு எரிந்த நிலையில் இரத்தக் கறையுடன் கூடிய பெண்களின் ஆடைகளின் பாகங்கள் காணப்பட்டுள்ளன.
இது தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் களனி கங்கை கரையில் தலை மற்றும் கைகால்கள் இல்லாத பெண் ஒருவரின் சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில் சடலம் நீண்டகாலமாக காணாமல் போயிருந்த 51 வயதுடைய பிரதீபாவின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.