உள்ளூர்

தொடரும் சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Published

on

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நில்வள கங்கை, ஜின் கங்கை மற்றும் குடா கங்கை ஆகிய நீரேந்து பிரதேசங்கள் மற்றும் அத்தனகலு ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களில் கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

குறித்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் மற்றும் வாகன சாரதிகள் இந்த அனர்த்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாளை (01) காலை 10.00 மணி வரை வெள்ள அபாய எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக நீர் நிலைகளில் நீர் மட்டம் அதிகரித்து வரும் காரணத்தால், பொதுமக்களை விழிப்புணர்வுடன் செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வளவ கங்கை, களு கங்கை மற்றும் சமனலவௌ நீர் நிலைகளில் நீர் மட்டம் தற்போது வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்கள் மிக அவதானம்

இதனால், பம்பஹின்ன, சமனலவௌ மற்றும் கல்தொட்ட ஊடாகவும் கூரகல புனித பூமி மற்றும் தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல், தூவிலி எல்ல போன்ற பிரதேசங்களை பார்வையிட செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு சமனலவௌ மற்றும் கல்தொட்ட பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆற்றங்கரையில் கூடாரம் அமைத்து தங்குவது, செல்ஃபி புகைப்படம் எடுப்பது, நீராடுவது, மீன் பிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் முற்றாக குறித்த செயற்பாடுகளை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version