இந்தியா
டிரைவர் வங்கிக் கணக்கில் திடீரென வந்த 9000 கோடி ரூபாய்! தூக்கத்தில் இருந்தவருக்கு வந்த குறுச்செய்தி!
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் ராஜ்குமார் என்பவரது வங்கிக் கணக்கில் 9000 கோடி ரூபாய் டெபாசிட் ஆன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனி நெய்க்காரப்பட்டி சேர்ந்த ராஜ்குமார் கோடம்பாக்கத்தில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த செப்டம்பர் 9ஆம்திகதி காரில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவரது கைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.
தூக்கத்தில் இருந்தவருக்கு வந்த குறுச்செய்தி
அதில் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிஇல் இருந்து ரூ.9,000 கோடி டெபாசிட் ஆனதாக குறுஞ்செய்தியில் போடப்பட்டது. திகைப்பில் ஆழ்ந்த அவர் தனது வங்கிக் கணக்கில் வெறும் 15 ரூபாய் இருக்கும் நிலையில் யாரோ தன்னை ஏமாற்ற முயல்கிறார்கள் என நினைத்துள்ளார்.
அதன் பின்னர் வந்த தகவல் உண்மைதானா என அறியும் ஆவலில் தனது வங்கிக் கணக்கில் இருந்து நண்பருக்கு 21,000 பணம் அனுப்பிய பின்னர், 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தன் வங்கிக் கணக்கிற்கு வந்ததை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இந்நிலையில் நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் பணம் பகிர்ந்த உடனேயே மீதமுள்ள பணம் அனைத்தையும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.
எடுத்த பணத்தை திருப்பித்தர வேண்டாம்
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் இருக்கும் தூத்துக்குடியில் இருந்து ராஜ்குமாருக்கு தொலைபேசி மூலம் அழைத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதிலிருந்து பகிரப்பட்ட பணத்தை செலவு செய்ய வேண்டாம் என வங்கி நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதுடன் நிர்வாகம் தரப்பில் ராஜ்குமாரை திடீரென மிரட்ட ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கிளைக்கு வங்கி தரப்பில் இருந்தும் டிரைவர் ராஜ்குமார் தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து 9000 கோடி ரூபாய் பணத்தில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட 21,000 பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக வாகன கடன் வழங்குவதாக வங்கி தரப்பிலிருந்து சமரசம் பேசி அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வாடகை கார் ஓட்டுநர் வங்கிக் கணக்கில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் திடீரென டெபாசிட் ஆன சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.