உள்ளூர்
திருமண நிகழ்வில் பறிபோன இளம் யுவதியின் உயிர்!
திருமண வைபவம் ஒன்றில் நடனமாடிக்கொண்டிருந்த இளம் யுவதியொருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மொரகஹாஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரணை படுவிட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வந்த மீகொடை உடகஹவத்தை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய திருமணமாகாத இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண், தாம்முடன் பணிபுரியும் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்விற்காக சில நபர்களுடன் ஹொரணை கொனபொல பகுதியில் உள்ள திருமண மண்டபமொன்றுக்கு சென்றுள்ளார்.
அங்கு குழுவினருடன் அவர் நடனமாடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த யுவதி மேலும் இரு யுவதிகளுடன் நடனமாடிக்கொண்டிருந்த வேளையில் அவ்விடத்தை விட்டுச் சென்றதாகவும் சிறிது நேரத்தின் பின்னர் சுகவீனமடைந்து ஹொரணை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் அவரை ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் குறித்த யுவதி ஹொரணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனையின் போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் யுவதியின் மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், சுவாசக் குழாயில் உணவு சிக்கி சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக ஹொரணை ஆதார வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சமாதான நீதவான் சுமேதா குணவர்தனவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஹொரணை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் பிரணித செனவிரத்னவால் இந்த பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.