உலகம்
குழந்தைகள் பராமரிப்பாளர் ஒருவரால் 91 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: வெளியான பல திடுக்கிடும் உண்மைகள்
அவுஸ்திரேலியாவில் முன்னாள் குழந்தைகள் பராமரிப்பாளர் (Ex Childcare Worker) ஒருவரால் 91 குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பில் இருந்த ஒருவர் (Ex Childcare Worker), 91 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக வெளியான தகவல் உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
45 வயது நபரான இவர், அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல இடங்களிலுள்ள குழந்தை பராமரிப்பு மையங்களில் பணி புரிந்து வந்திருக்கிறார்.
காணொளியாக பதிவு செய்யப்பட்ட வன்கொடுமைகள்
சிட்னி, பிரிஸ்பேன் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 12 வெவ்வேறு குழந்தை பராமரிப்பு மையங்களில் இந்தக் குற்றச் சம்பவங்கள் நடந்ததாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
91 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 2022-ம் ஆண்டு இவர் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து இவரின் வீட்டை சோதனை செய்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை காணொளியாக எடுத்து வைத்து, அதை இணையத்தில் பரப்பியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக 4,000 படங்களும், காணொளிகளும் கிடைத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டார்க் வெப் (dark web) இணையத்தில் குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானது தொடர்பான புகைப்படம் வெளியான நிலையில், அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அந்தப் புகைப்படத்தை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அப்போது இந்த முன்னாள் குழந்தைகள் பராமரிப்பு பணியாளர் தொடர்பான விவரங்கள் கிடைக்கப்பெற்றதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தகவல் வெளியிட்ட பொலிஸ் அதிகாரிகள் அதிகாரிகள்,
பாதிக்கப்பட்ட 91 குழந்தைகளில் 87 பேர் அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள்.
தாங்கள் இதுவரை கண்டிராத `கொடூரமான’ வழக்குகளில் இதுவும் ஒன்று. மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
அவன் இந்த குழந்தைகளுக்கு என்ன செய்தான் என்பது யாருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டது” என்று கூறியுள்ளனர்.
246 பாலியல் வன்கொடுமை வழக்குகள்
45 வயதான அந்த நபரின் மீது 246 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
2007 மற்றும் 2022-க்கு இடையில் 91 குழந்தைகளுக்கு எதிராக 1623 பாலியல் குற்றங்களை அந்த நபர் நிகழ்த்தியிருப்பதும், அவை அனைத்திலும் பத்து வயதுக்கும் குறைவான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இந்நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் (21.08.2023) ஆம் திகதி பிரிஸ்பேன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.